< Back
மாநில செய்திகள்
3 இந்திய மீனவர்களை விடுவித்த இந்தோனேசிய கடற்படை - சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்
மாநில செய்திகள்

3 இந்திய மீனவர்களை விடுவித்த இந்தோனேசிய கடற்படை - சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்

தினத்தந்தி
|
20 Nov 2022 10:10 PM IST

இந்தோனேசியா சிறையில் இருந்த குமரி மீனவர் உள்பட 3 பேரும் இந்திய தூதரக அதிகாரிகளின் நடவடிக்கை மூலம் விடுதலை செய்யப்பட்டனர்.

சென்னை,

குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த மரிய ஜெசின்தாஸ் என்ற மீனவர் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி அந்தமான் தீவில் இருந்து 8 மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்றார். அப்போது, எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இந்தோனேசியா கடற்படையினர் கைது செய்தனர்.

கோர்ட்டு விசாரணைக்கு பிறகு அதில் 4 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மரிய ஜெசின்தாஸ் உள்பட 4 பேரை சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது, மரிய ஜெசின்தாஸ் சிறையில் இருந்தபடியே உடல்நலக்குறைவு காரணமாக இறந்ததாக தகவல் வெளியான நிலையில் அவரது உடல் ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து இந்தோனேசியா சிறையில் உள்ள 3 மீனவர்களான பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த இம்மானுவேல் ஜோஸ், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜோமோன், சிஜின் ஸ்டீபன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் மீனவர்களின் உறிவினர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் இந்தோனேசியா சிறையில் இருந்த குமரி மீனவர் உள்பட 3 பேரும் இந்திய தூதரக அதிகாரிகளின் நடவடிக்கை மூலம் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட 3 பேரும் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அங்கிருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்