திருச்சி
இந்தியாவில் முதன் முறையாக முதியோருக்கான செல்போன் செயலி அறிமுகம்
|இந்தியாவில் முதன் முறையாக முதியோருக்கான செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
மாநில அளவிலான சர்வதேச முதியோர் தின விழா திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு முதியோருக்கான தமிழ்நாடு மூத்த குடிமக்களுக்கான மாநில கொள்கை (2023) புத்தகத்தை வெளியிட்டனர்.
இதைத்தொடர்ந்து முதியோருக்கான செல்போன் செயலியை அமைச்சர்கள் அறிமுகம் செய்து வைத்தனர். பின்னர் முதியவர்களை கவுரவித்து அவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்கள். மேலும் மூத்த குடிமக்களில் 3 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன் முறையாக ரசு முதியோருக்கான செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம், தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதியோருக்கு பல்வேறு துறைகளில் வழங்கப்படும் சேவைகள் அவர்களுக்கு ஒருங்கிணைத்து வழங்கப்படுகிறது. மூத்தகுடிமக்கள் சார்ந்த பல்வேறு துறை அலுவலர்கள் விவரம், மருத்துவமனை மற்றும் முதியோர் இல்லங்கள், அரசு அலுவலகங்களை கூகுள் வரைபடம் மூலம் வழிகாட்டுதல், உதவி எண்களுக்கு தொடர்பு கொள்ளுதல், சட்ட வழிகாட்டுதல்கள், மனநல ஆலோசனை பெற உதவி, குறைதீர்க்கும் வழிமுறைகள், அவசர உதவி தொடர்பு, மருந்துகள் உட்கொள்ள நினைவுபடுத்துதல் போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ளடங்கி உள்ளது. நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக்சிரு, ஆணையர் அமுதவல்லி, கூடுதல் இயக்குனர் கார்த்திகா, மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் இயக்குனர் சந்திரகலா மற்றும் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.