< Back
மாநில செய்திகள்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது
விருதுநகர்
மாநில செய்திகள்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது

தினத்தந்தி
|
13 Oct 2022 1:08 AM IST

வளர்ந்த நாடுகளை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது என மத்திய நிதித்துறை இணை மந்திரி டாக்டர் பகவத்காரத் பெருமிதத்துடன் கூறினார்.

வளர்ந்த நாடுகளை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது என மத்திய நிதித்துறை இணை மந்திரி டாக்டர் பகவத்காரத் பெருமிதத்துடன் கூறினார்.

பாராட்டு

விருதுநகரில் வங்கியாளர்களின் சேவை மற்றும் பயனாளிகளின் பலன் ஆகியவை குறித்து ஆய்வு நடத்திய மத்திய இணை நிதி மந்திரி டாக்டர் பகவத்காரத் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னேற விழையும் மாவட்டங்களான 112 மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டம் முதல் மூன்று இடங்களுக்குள் உள்ளது பெருமையளிக்கிறது. இதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய அளவில் 1 லட்சம் பேருக்கு 14 வங்கி கிளைகள் உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் 13 வங்கி கிளைகள் உள்ளன. எனவே உடனடியாக 15 வங்கிக்கிளைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளேன். மாவட்டத்தில் மொத்தம் உள்ள 450 கிராம பஞ்சாயத்துக்களில் 111 பஞ்சாயத்துக்களில் 100 சதவீதம் பேர் வங்கிகளில் ஏதாவது ஒரு கணக்கு தொடங்கியுள்ளனர். மேலும் பிரதமரின் காப்பீட்டு திட்டத்திலும் இவர்கள் பங்கு பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தியுள்ளேன்.

பொருளாதார வளர்ச்சி

இந்தியாவை பொருத்தமட்டில் வளர்ந்த நாடுகளை விட பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் உள்ளதாக உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் தெரிவித்துள்ள நிலையில் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தை விட நாம் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் உள்ளோம்.

அமெரிக்கா, சீனா போன்ற வளர்ந்த நாடுகளை விடவும் தெற்காசிய நாடுகளை விடவும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது. இதனை அதிகப்படுத்த பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

சான்றிதழ்

கல்வி கடனை பொருத்தமட்டில் இந்தியாவில் படித்தாலும் சரி, வெளிநாடுகளில் படிக்க வேண்டும் என்றாலும் சரி, ரூ. 4 லட்சம் முதல் ரூ. 80 லட்சம் வரையிலும் வங்கிகள் கடன் வழங்க எவ்வித பிணையும் கேட்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கலெக்டர் மேகநாத ரெட்டி உடனிருந்தார்.

முன்னதாக மத்திய இணை நிதி மந்திரி டாக்டர் பகவத்காரத் வங்கி அதிகாரிகள் மற்றும் பயனாளிகளிடம் நேரடியாக அவர்களது அனுபவங்களை கேட்டு ஆய்வு செய்தார். பயனாளிகளிடம் பெற்ற கடனை முறையாக செலுத்தினால் மேலும் அதிக கடன் பெற வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தார். வங்கி அதிகாரிகளிடம் வங்கிக்கு வந்து கடன் விண்ணப்பம் தரும் வாடிக்கையாளரிடம் அதை முறையாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். சாதனை படைத்த வங்கியாளர்களுக்கு அவர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

நிர்வாகிகள் கூட்டம்

விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் திருத்தங்கலில் நடைபெற்றது. இதில் மத்திய இணை நிதி மந்திரி டாக்டர் பகவத்காரத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட தலைவர் சுரேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், பொன்பாலகணபதி, செல்வம், மாநகர செயலாளர் பாட்டக்குளம் பழனிச்சாமி, மாநகராட்சி கவுன்சிலர் குமரிபாஸ்கர், தொழில்துறை தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்