< Back
மாநில செய்திகள்
மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா தொடங்கியது: ஒரு மாதம் நடக்கிறது
மாநில செய்திகள்

மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா தொடங்கியது: ஒரு மாதம் நடக்கிறது

தினத்தந்தி
|
23 Dec 2023 5:29 AM IST

மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் இந்திய நாட்டியவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா ஒரு மாதம் நடக்கிறது.

மாமல்லபுரம்,

மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளை கவரும் வகையில் ஒரு மாதம் இந்திய நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நேற்று தொடங்கியது. வருகிற ஜனவரி 21-ந்தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. மாமல்லபுரம் கடற்கரை சாலையில் உள்ள நுழைவு வாயில் அருகில் திறந்தவெளி மேடையில் நேற்று மாலை 6 மணிக்கு தொடக்க விழா நடைபெற்றது.

விழாவுக்கு வந்தவர்களை மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் வரவேற்றார். மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் முன்னிலை வகித்தார். இந்திய நாட்டிய விழாவினை தமிழக சுற்றுலாத்துறை ஆணையர் காகர்லா உஷா, சுற்றுலாத்துறை இயக்குனர் மணிவாசகம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

கலைநிகழ்ச்சிகள்

விழாவில் மாமல்லபுரம் பேரூராட்சி துணைத்தலைவர் ஜி.ராகவன், பேரூராட்சி கவுன்சிலர்கள் எம்.வி.மோகன்குமார், வள்ளி ராமச்சந்திரன், லதாகுப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவின் ஒரு மாதம் முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் பரதநாட்டியம், ஒடிசி, கதகளி, குச்சுபுடி, மோகினியாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

முதல் நாள் நிகழ்ச்சியான நேற்று மதுரை கோவிந்தராஜ் குழுவினரின் கரகம், காவடி உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் பெங்களூரு கலாம்சூ குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியான நேற்று வெளிநாட்டு பயணிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தமிழக கலாச்சாரத்தை பின்பற்றும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் மல்லிகைப்பூ மாலைகள் அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்