இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
|இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா என்பது குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் இது என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
சென்னை,
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் ஏற்று கொள்ளப்பட்டதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினம் (இந்திய அரசியல் சாசன தினம்) கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1949-ல் நவம்பர் 26-ம் தேதி இந்திய அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டது. இது ஜனவரி 26, 1950 அன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்நிலையில், சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அரசமைப்பு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதாவது: "இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது. மிகுந்த அழுத்தங்களுக்கு இடையே அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா என்பது குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் இது. நீதிமன்றங்களில் மட்டும் இல்லாமல் சட்டப் பல்கலைக்கழகங்களிலும் அரசமைப்புச் சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும்" என்று கூறினார்.