திருச்சி
மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு போராட்டம்: ஸ்ரீரங்கம், மணப்பாறையில் 138 பேர் கைது
|ஸ்ரீரங்கம், மணப்பாறையில் மத்திய அரசை கண்டித்துமறியலில் ஈடுபட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 138 பேர் கைது செய்யப்பட்டனர்.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், இந்திதிணிப்பு உள்பட மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று ஸ்ரீரங்கத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் கவுன்சிலர் சுரேஷ் தலைமையில் பொதுச்செயலாளர் பார்வதி, மாவட்ட பொருளாளர் சண்முகம், தேசிய கட்டுப்பாட்டுக்குழு செல்வராஜ் உள்பட திரளானோர் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் ரெயில் மறியல் செய்ய முயன்றனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தடுப்புகளை மீறி ரெயில் நிலையம் அருகே சென்ற அவர்கள் அங்கு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட 70 பெண்கள் உள்பட 94 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள மண்டபத்தில் தங்கவைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர, ஒன்றியக் குழு சார்பில் ஒன்றிய செயலாளர் தங்கராசு தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 44 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.