2047-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறும் - மத்திய மந்திரி எல்.முருகன்
|2047-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறிவிடும் என்று கோவையில் மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.
கோவை,
கோவையில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நிகழ்ச்சி நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதனை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் கொடியை அசைத்து சுதந்திர விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
75 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை தேசியக்கொடியேற்ற பிரதமர் அழைப்பு விடுத்து உள்ளார். தமிழகத்தில் சுதந்திரத்திற்காக எண்ணற்ற தலைவர்கள் போராடி இருக்கின்றனர். சுதந்திரத்திற்காக போராடிய அறியப்படாத தலைவர்கள் நிறைய பேர் உள்ளனர்.
தேசிய பக்தி இருப்பவர்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுவார்கள். 2047-ல் அப்துல் கலாம் கண்ட கனவு நிறைவேறி வல்லரசாக இந்தியா மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.