மதுரை
பா.ஜனதா அரசை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்- ம.தி.மு.க. மாநாட்டில் தீர்மானம்
|பா.ஜனதா அரசை ஆட்சி பீடத்தில் இருந்து தூக்கி எறிய நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் உருவாக்கிய இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என ம.தி.மு.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
பா.ஜனதா அரசை ஆட்சி பீடத்தில் இருந்து தூக்கி எறிய நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் உருவாக்கிய இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என ம.தி.மு.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தீர்மானம்
மதுரை வலையங்குளத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ம.தி.மு.க.சார்பில் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் பின்வருமாறு:-
பாரதம் என்று இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கான முயற்சி என்பது இந்துராஷ்டிரம் அமைப்பதற்கான முதல் அத்தியாயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்றுவதற்கு முனைந்திருப்பது கண்டனத்துக்கு உரியது. பா.ஜ.க.வை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றுவது ஒன்றுதான் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் ஒரே தீர்வு என ம.தி.மு.க. மாநாடு பிரகடனம் செய்கிறது.
ஒரே தேர்தல்
சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒரே நாடு; ஒரே தேர்தல் சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மக்களாட்சி கோட்பாடுகளின் ஆணிவேர்களை அறுத்து எறிந்து ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும், பா.ஜனதாவின் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.
பிரதமர் மோடி செப்டம்பர் 17-ந் தேதி விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தார். பா.ஜனதா அரசு, 18 வகையான குலத்தொழில்களை பட்டியலிட்டு, வர்ணாசிரம முறையை நிலைநாட்ட முனைந்திருப்பதற்கு கண்டனம் தெரிவிப்பதுடன் விஸ்வகர்ம யோஜனா திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.
நீட் விலக்கு
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட முன்வரைவுக்கு உடனடியாக மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உயர்கல்வி துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இந்த பல்கலைக்கழக சட்ட விதிகளில், ஆளுநர், துணைவேந்தரை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவை அமைக்க வழிமுறை இல்லை. ஆனால் தற்போது கவர்னர் நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக சட்ட விதிகளுக்கு எதிராக தேடுதல் குழுவை தன்னிச்சையாக முடிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கு இந்த மாநாடு கண்டனத்தை தெரிவிக்கிறது.
எய்ம்ஸ் மருத்துவமனை
2018 ஜூனில் மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என மத்திய அரசு அறிவித்தது.
மதுரை 'எய்ம்ஸ்' மருத்துவமனையுடன் அறிவித்த நாட்டின் பிற மருத்துவமனை கட்டுமானப்பணிகள் முடிந்து, தொடங்கி நடக்கும் நிலையில் 2022-ல் திறக்கப்பட வேண்டிய மதுரை 'எய்ம்ஸ்' மருத்துவமனை மட்டுமே, பணிகள் எதுவுமே தொடங்காமல், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதோடு நிற்கிறது. மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
கூட்டுக்குடிநீர்
மதுரை மாநகராட்சியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையைப் போக்க அம்ரூத் 3 திட்டத்தின் கீழ் ரூ.1,685.76 கோடியில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நேரடியாக மதுரைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 5 பகுதிகளாக இந்த குடிநீர் திட்டப்பணிகள் நடக்கின்றன.
ஆரம்பத்தில் இந்தக் குடிநீர் திட்டம் தொடங்கும்போது, 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் திட்டத்தை முடித்து, மதுரை மக்களுக்கு குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டது.பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டம் தாமதமானது. தற்போது 60 சதவீதம் வரையே பணிகள் நிறைவுப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.மதுரை மாநகருக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற ம.தி.மு.க. மாநாடு வலியுறுத்துகிறது.
திருப்பூர் பனியன் தொழிலை பாதுகாக்க வேண்டும். மத்திய அரசு குருமன்ஸ் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
இலங்கைப் போரின்போது ஒன்றரை லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்களை படுகொலை செய்த சிங்கள அரசு, அதற்காக இன்று வரை பொறுப்பு ஏற்கவில்லை. எனவே உலகத் தமிழினம் இணைந்து தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு ஒன்றை ஐ.நா. மன்றம் மூலம் நடத்துவதற்கு உறுதி ஏற்க வேண்டும்.
இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய தலைமை தணிக்கை குழு, சி.ஏ.ஜி. அறிக்கையின் மூலம் 7 திட்டங்களில் 7.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பா.ஜனதா அரசு ஊழல் செய்திருப்பது அம்பலமாகி இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா அரசை ஆட்சி பீடத்திலிருந்து தூக்கி எறிய எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கி உள்ள இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.
நியாயவிலைக் கடைகளில் கொடுக்கும் பாமாயில் எண்ணெயை ரத்து செய்து விட்டு தேங்காய் எண்ணெய் வழங்க ஆவண செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.