< Back
மாநில செய்திகள்
உலக நாடுகளுக்கு தலைமை தாங்கும் வகையில் இந்தியாவை உருவாக்க வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி
மாநில செய்திகள்

உலக நாடுகளுக்கு தலைமை தாங்கும் வகையில் இந்தியாவை உருவாக்க வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி

தினத்தந்தி
|
12 Oct 2022 2:56 AM IST

2047-ம் ஆண்டுக்குள் உலக நாடுகளுக்கு தலைமை தாங்கும் வகையில் இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று சென்னையில் நடந்த கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

கருத்தரங்கு

சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய அரசின் சார்பில் இந்தியாவின் மொழி, வர்த்தகம், கலாசாரம், பயணம், சுற்றுலா மற்றும் வரலாற்றை விளக்கும் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' திட்டம் குறித்த 2 நாள் கருத்தரங்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று முன்தினம் தொடங்கியது.


நேற்று 2-வது நாள் நிகழ்ச்சி நடந்தது. இந்த கருத்தரங்கில் அழகப்பா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

கனவுகளை நிறைவேற்ற வேண்டும்

கருத்தரங்கின் நிறைவுவிழா நேற்று நடந்தது. அதில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், '2047-ம் ஆண்டுக்குள் உலக நாடுகளுக்கு தலைமை தாங்கும் வகையில் இந்தியாவை உருவாக்க வேண்டும். தேசத்தின் வளர்ச்சி என்பது மக்களின் வளர்ச்சியில் உள்ளது. இந்தியாவை முழுமையாக புரிந்துகொண்டு நாட்டின் முன்னேற்றத்துக்கு இளைஞர்கள் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற வேண்டும். தோல்விகளை வென்று கனவுகளை நிறைவேற்ற பாடுபட வேண்டும்' என்றார்.

அதைத்தொடர்ந்து, கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதில் அளித்தார். பின்னர் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

நன்றி தெரிவித்தனர்

கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் மெரினா கடற்கரை, அண்ணா சதுக்கம், எம்.ஜி.ஆர். சமாதி, சென்னை பல்கலைக்கழகம், நேரு ஸ்டேடியம், எழும்பூர் அரசு அருங்காட்சியகம், பிர்லா கோளரங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

கருத்தரங்கில் பங்கேற்க வாய்ப்பு வழங்கியதற்காக கவர்னருக்கு பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்