< Back
மாநில செய்திகள்
பொருளாதார நெருக்கடியில் சிக்கி பேரிடரை நோக்கி இந்தியா செல்கிறது:  ராகுல் காந்தி பேச்சு
மாநில செய்திகள்

பொருளாதார நெருக்கடியில் சிக்கி பேரிடரை நோக்கி இந்தியா செல்கிறது: ராகுல் காந்தி பேச்சு

தினத்தந்தி
|
7 Sept 2022 7:50 PM IST

தேசிய கொடி ஒவ்வொரு மதம், மாநிலம் மற்றும் மொழிக்கு உரியது என்றும் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் அது தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது என்றும் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

கன்னியாகுமரி,



கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு ராகுல் காந்தி பாதயாத்திரை செல்கிறார். தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

மொத்தம் 150 நாட்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரை மூலம் ராகுல்காந்தி 3,570 கி.மீ. தூரத்தை நடந்தே சென்று காஷ்மீரை அடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், அகில இந்திய நிர்வாகிகள், அந்தந்த மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் ராகுல் காந்தியுடன் செல்கிறார்கள்.

இந்த நடைபயணம் கன்னியாகுமரியின் காந்தி நினைவு மண்டபத்தில் தொடங்கியது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் கொடுத்து பாதயாத்திரையை தொடங்கிவைத்துள்ளார்.

இந்த பேரணியில் ராகுல் காந்தி பேசும்போது, இந்த அழகிய இடத்தில் இருந்து இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்குவது எனக்கு அதிக மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு தனி நபரின் மதம் மற்றும் மொழியை தேசிய கொடி பிரதிபலிக்கிறது. அவர்கள் (பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்), இந்த கொடி தங்களது தனிப்பட்ட சொத்து என நினைக்கின்றனர்.

நாட்டின் ஒவ்வொரு தனிப்பட்ட அமைப்பும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. எந்தவொரு மதத்தினையும் தேர்ந்தெடுத்து அதனை கடைப்பிடிக்கும் உரிமைக்கு மூவர்ண கொடி உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால், அந்த கொடி இன்று தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.

மூவர்ண கொடி எளிதில் வந்துவிடவில்லை. ஒவ்வொரு மதம், பகுதி மற்றும் மொழி சார்ந்த இந்தியர்களால் அது உருவாக்கப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார். இதுவரை இல்லாத வகையில் இந்தியா, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. வேலைவாய்ப்பின்மை விகிதமும் உயர்ந்து காணப்படுகிறது. பேரிடரை நோக்கி நாடு செல்கிறது என அவர் பேசியுள்ளார்.

எதிர்க்கட்சிகளை சி.பி.ஐ., அமலாக்க இயக்குனரகம் மற்றும் வருமான வரி துறையினரை கொண்டு அச்சுறுத்தி விடலாம் என அவர்கள் (பா.ஜ.க.) நினைக்கின்றனர். ஆனால், இந்திய மக்களை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இந்தியர்கள் இதற்கெல்லாம் பயப்படமாட்டார்கள். பா.ஜ.க.வால் எதிர்க்கட்சியின் ஒரு தனிப்பட்ட தலைவர் கூட பயப்பட போவதில்லை என்றும் அவர் பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்