அடுத்து ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பார்களா? பீட்டர் அல்போன்ஸ் கேள்வி
|பீட்டர் அல்போன்ஸ், சர்ச்சைக்குரிய அழைப்பிதழ் நகலை எக்ஸ் தளத்தில் ஷேர் செய்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
ஜி20 உச்சி மாநாடு தொடர்பான ஒரு அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என அச்சிடப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் தலைவர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்தளிக்க உள்ளார். இதற்கான அழைப்பிதழில் அவரை குறிப்பிடும் இடத்தில், "இந்தியாவின் ஜனாதிபதி" என்பதற்கு பதிலாக "பாரத்தின் ஜனாதிபதி" என அச்சிடப்பட்டுள்ளது. இதனால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பவன் கேரா கூறுகையில், "பிரதமர் மோடிக்கு இப்போது இந்தியா என்ற பெயரால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்றுகிறார். உலகமே அவரைப் பார்த்து சிரிக்கிறது. நீங்கள் எங்களை, எங்கள் சித்தாந்தங்களை, எங்கள் தலைவர்களை வெறுப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்தியாவையும் இந்தியர்களையும் வெறுக்காதீர்கள்" என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ், சர்ச்சைக்குரிய அழைப்பிதழ் நகலை தனது எக்ஸ் தளத்தில் ஷேர் செய்து கருத்தை பதிவிட்டுள்ளார்.
"அடுத்து Reserve Bank of India என்று அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளெல்லாம் செல்லாது என ஒன்றிய அரசு அறிவிக்குமா? "துக்ளக் தர்பார்" என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும்?" என பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.