< Back
மாநில செய்திகள்
காங்கிரசால் சுதந்திரம் கிடைக்கவில்லை - தமிழ்நாடு கவர்னர் பரபரப்பு பேச்சு
மாநில செய்திகள்

காங்கிரசால் சுதந்திரம் கிடைக்கவில்லை - தமிழ்நாடு கவர்னர் பரபரப்பு பேச்சு

தினத்தந்தி
|
24 Jan 2024 6:31 AM IST

நேதாஜியும், இந்திய தேசிய ராணுவமும்தான் சுதந்திரம் கிடைக்க முக்கிய காரணம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

சென்னை,

நேதாஜி சுபாஷ்சந்திரபோஸின் 127-வது பிறந்தநாளையொட்டி, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

இந்தியாவின் சுதந்திரத்துக்காக போராடியவர்களுள் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் முதன்மையானவர். இன்றைய மாணவர்களுக்கு, சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகள், வீரர்களையும், அவர்களின் தியாகத்தையும், நம் வரலாற்றையும் இன்று நாம் மறக்கத்தொடங்கியிருக்கிறோம்.

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில், அதிக வீரர்கள், தளபதிகள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. அன்றைய காலத்திலேயே, பெண்கள் படைப்பிரிவை உருவாக்கி, வழிநடத்தியவர் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ். நேதாஜியின் வழியில், பிரதமர் நரேந்திர மோடியும், இன்றைய இந்திய ராணுவத்தில், விமானப்படையில், கப்பல் படையில் பெண்களின் பங்கை உறுதி செய்திருக்கிறார்.

மகாத்மா காந்தி தலைமையில் சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற காலத்தில், பிரிவினைவாத முயற்சியும் நடைபெற்றது. இந்தியர்கள் அப்போது பிரிந்திருந்தார்கள். 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு, நேதாஜியும், இந்திய தேசிய ராணுவமும்தான் முக்கிய காரணம்.

இந்திய தேசிய காங்கிரசால்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்பதை முழுமையாக ஏற்க முடியாது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு அது ஒரு சிறிய காரணம் அவ்வளவுதான். ஆனால் இந்திய தேசிய ராணுவத்தின் புரட்சிதான் இந்தியா சுதந்திரம் அடைவதற்கான மிக முக்கிய காரணமாக இருந்தது.

அப்போதைய இங்கிலாந்து பிரதமர் இந்திய தேசிய காங்கிரசின் போராட்டம் இந்தியா சுதந்திரம் அடைய ஒரு சிறிய காரணமாக இருந்தது எனவும், நேதாஜியின் புரட்சியும், இந்திய தேசிய ராணுவத்தின் பலமும்தான் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க மிகப்பெரிய காரணமாக இருந்தது எனவும் கூறியுள்ளார்.

இந்திய வீரர்களை வைத்து, ஆங்கிலேய ராணுவத்தை எதிர்த்து போரிட்ட நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ், 1946-ல் இந்திய பெருங்கடலையே முடக்கி, ஆங்கிலேயர்களின் கப்பற்படையை தோற்கடித்தார். அப்போது ஆங்கிலேய ஆட்சியாளர்கள் செய்வதறியாது தவித்தனர். இனியும் இந்தியாவில் இருப்பது தங்களுக்கு பாதுகாப்பானதாக இருக்காது என்பதால்தான், 1947-ல் இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. இந்திய சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் நேதாஜி. ஆனால், அவரைப் பற்றி நாம் பெரிதும் பேசுவதில்லை.

இந்திய சுதந்திர வரலாற்றில், நேதாஜி போன்றோரை நாம் எப்படி இருட்டடிப்பு செய்ய முடியும்? நம் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில், நேதாஜியின் பங்களிப்பு பற்றி இனி ஆராய்ச்சி செய்து, படிக்கத்தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்