< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெரம்பலூரில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: கலெக்டர் கற்பகம் தேசியக்கொடி ஏற்றினார்

தினத்தந்தி
|
16 Aug 2023 12:18 AM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் கற்பகம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். பின்னர், 286 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சுதந்திர தின விழா

பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் கற்பகம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீசார், ஊர்க்காவல்படை, தீயணைப்பு மற்றும் மீட்பு படை மற்றும் சாரண-சாரணியர், செஞ்சிலுவை சங்கம், என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் உருவப்படங்களுக்கு கலெக்டர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். விழாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு கலெக்டர் பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கி கவுரவித்தார். அதன்பின்னர் சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்கள், தேசியக்கொடி நிறத்திலான பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

பதக்கங்கள்

இதனைத்தொடர்ந்து போலீஸ் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 45 போலீஸ் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு பதக்கங்களையும், பாராட்டு சான்றிதழ்களையும், மாவட்ட பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 286 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 4 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணிபுரிந்த 286 அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் கற்பகம் வழங்கினார்.

இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளின் தேசப்பற்று நடனம், கேரள கதகளி, மோகினி ஆட்டம், சாகச நிகழ்ச்சிகள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அரசு பள்ளி மாணவிகள் சேலைகளில் தேசியக்கொடியை உருவாக்கி நின்று பாராட்டுக்களை பெற்றனர். அதனைத்தொடர்ந்து, வனத்துறையின் சார்பில் கலெக்டர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லலிதா, ஆர்.டி.ஓ. நிறைமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மோப்பநாய்களின் சாகச நிகழ்ச்சிகள்

பெரம்பலூர் மாவட்ட துப்பறியும் பிரிவில் பணியாற்றும் நிஞ்சா, சக்தி, சூரியா, பைரவா ஆகிய மோப்ப நாய்களின் கொடிவணக்கம், துப்பறியும் நிகழ்ச்சி, கம்பி வளையத்திற்குள் தாண்டுதல், கட்டளைக்கு அடிபணிதல், தடையை தாண்டுதல் போன்ற சாகச நிகழ்ச்சிகள் காண்போரை கவர்ந்தன.

செல்பி எடுத்துக்கொண்ட பொதுமக்கள்

பார்வையாளர்கள் நம்ம பெரம்பலூர் என்ற தலைப்பிட்டு தேசியக்கொடி போல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் இருந்து போட்டோக்கள் மற்றும் செல்பி எடுத்துக்கொண்டனர்.

குடிநீர் கிடைக்காமல் அவதி...

சுதந்திர தினவிழாவின் போது வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், பாராட்டு சான்றிதழ் பெற்ற அரசு அலுவலர்கள் ஏறத்தாழ 40 நிமிடம் கடும் வெயில் என்று பாராமல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விழாவிற்கு பார்வையாளராக வந்திருந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்தனர். மினரல் குடிநீர் வைக்கப்படவில்லை என்று பெற்றோர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஜிம்னாசியம் அருகே ஒரே ஒரு இடத்தில் மட்டும் தொட்டியில் குடிநீர் வைக்கப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்