ஈரோடு
அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா
|ஈரோட்டில் அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் நாகரத்தினம் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். துணை மேயர் செல்வராஜ் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த விழாவில் செயற்பொறியாளர் விஜயகுமார் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு தெற்கு ரெயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் சி.எஸ்.கவுதமன் மாலை அணித்து மரியாதை செலுத்தினார்.
ஈரோடு தாலுகா அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம், ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஈரோடு ஊராட்சி ஒன்றியக்குழு அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.