திருச்சி
அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா
|அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
சுதந்திர தின விழா
திருச்சி கல்லுக்குழி ரெயில்வே மைதானத்தில் திருச்சி ரெயில்வே கோட்டம் சார்பில் 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் திருச்சி கோட்ட முதன்மை பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூடுதல் ரெயில்வே கோட்ட மேலாளர் ராமலிங்கம் உள்ளிட்ட ரெயில்வே அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் அன்பழகன் தேசியக்கொடி ஏற்றி, ரெயில்வே பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
ரூ.11 ஆயிரம் கோடி அதிக வருவாய்
அப்போது அவர் பேசியதாவது:- தெற்கு ரெயில்வே கடந்த நிதியாண்டை காட்டிலும் இந்த நிதியாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி அதிக வருவாய் ஈட்டியுள்ளது. ரெயில் பயணிகள் பயன்பெறும் வகையில் 3 வந்தே பாரத் ரெயில்களை அறிமுகம் செய்துள்ளோம். இந்த ரெயிலில் வேகம் மற்றும் தொழில்நுட்ப வசதி உள்ளது. இது ரெயில் பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து வரும் ஆண்டுகளில் கூடுதலாக வந்தே பாரத் ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட வழித்தடத்தில் மணிக்கு 80, 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வந்த ரெயில்கள் 110, 130 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 90 ரெயில் நிலையங்களை மேம்படுத்தப்படும் பணி தொடங்கப்பட்டுள்ளன. வருகிற 2024-ம் ஆண்டுக்குள் இந்த பணிகள் நிறைவடையும். இதில் 21 முக்கிய ரெயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகளும் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
பெண் வீராங்கனைகள்
பின்னர் ரெயில்வே பாதுகாப்பு படையில் சிறப்பாக பணியாற்றியவர்களை கவுரவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மேலும் வெடிபொருட்களை கண்டறிவது உள்ளிட்ட புலனாய்வுக்கு பயன்படுத்தப்படும் 3 மோப்பநாய்கள் தங்களது திறமையை மைதானத்தில் வெளிப்படுத்தின. இதையடுத்து புல்லட் வீரர்கள், ரெயில்வே பாதுகாப்பு படை பெண் வீராங்கனைகள், அதிநவீன துப்பாக்கிகளை கொண்டு சாகசங்களை நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் ரெயில்வே ஊழியர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விமான நிலையம், பொன்மலை பணிமனை
இதேபோல் திருச்சி விமான நிலையத்தில் நடந்த விழாவில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங் நயால் உடனிருந்தார். இதைத்தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையின் அணிவகுப்பு, விமான நிலையத்தின் மோப்ப நாய் பிரிவு சார்பில் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழாவில் திருச்சி விமான நிலைய துணை பொது மேலாளர்கள் கோபாலகிருஷ்ணன், சந்தானகிருஷ்ணன் உள்பட ஆணையக்குழு அதிகாரிகள், தீயணைப்பு துறை, விமான நிறுவன ஊழியர்கள், பராமரிப்பு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் முதன்மை மேலாளர் சியாம்தார் ராம் தேசிய கொடியை ஏற்றி, ரெயில்வே போலீஸ் பாதுகாப்பு படை, செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் படை, பாரத சாரண, சாரணியர் மற்றும் பணிமனை பயிற்சி மையத்தினுடைய பயிற்சியாளர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார்.