பெரம்பலூர்
கல்வி நிலையங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
|பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களில் சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்விக்குழுமம்
பெரம்பலூரில் உள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்விக்குழுமத்தின் சார்பில் 77-வது சுதந்திர தினவிழா ரோவர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி கல்விக்குழுமத்தின் மேலாண் தலைவர் ரோவர் வரதராஜன் தேசியக்கொடியை ஏற்றிவைத்து திறந்த ஜீப்பில் சென்று என்.சி.சி., இந்திய செஞ்சிலுவை சங்கம், சாரண-சாரணியர் சங்கங்களை சேர்ந்த தன்னார்வ மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் கல்விக்குழுமத்தின் துணைத்தலைவர் ஜான்அசோக், செயிண்ட் ஜான் சங்க அறக்கட்டளை புரவலர்கள் மகாலட்சுமி வரதராஜன், கிறிஸ்துதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனைத்தொடர்ந்து ஒருமைப்பாட்டு உறுதி மொழி ஏற்கப்பட்டது.
விழாவையொட்டி கல்லூரி கலைக்குழுவினரின் கரகாட்டம், பள்ளி மாணவர்களின் சாகச நிகழ்ச்சிகள், மாணவிகளின் தேசிய ஒருமைப்பாட்டு நடனம் உள்பட வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் கலைக்கல்லூரி முதல்வர் ஜெயந்தி, உயர்கல்வி சேர்க்கைக்கான ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரவி மற்றும் மருந்தியல் கல்லூரி முதல்வர் நெப்போலியன், பொறியியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பெரியசாமி, கல்வியியல் கல்லூரி முதல்வர் செல்வன் மற்றும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கல்விக்குழுமத்தின் தலைமை அலுவலக மேலாளர் ஆனந்தன், கல்வி சார்ந்த இயக்குனர் சத்தீஸ்வரன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். முன்னதாக செவிலியர் கல்லூரி முதல்வர் விமலா வரவேற்றார். முடிவில் பிசியோதெரபி கல்லூரி முதல்வர் ஜான்பிராங்களின் நன்றி கூறினார்.
விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அயன்பேரையூர் கிராமத்தில் உள்ள லெப்பைக்குடிக்காடு விஸ்டம் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி முதல்வர் அப்துல்லா பாஷா வாழ்த்துரை வழங்கினார். பொருளாளர் அப்துல் ரஹிம் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். செயலாளர் சையது ஹுசேன் கலந்து கொண்டு பேசினார். பள்ளியின் மாணவ தலைவி வரவேற்புரை வழங்கினார்.
இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகள் தேசத்தலைவர்கள் போல் வேடமணிந்து கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளியின் நிர்வாக தலைவர் ஆஜம் பாஷா, அறங்காவலர்கள் ஜாகிர் உசேன், சாதிக் பாஷா, பத்ருதீன், ஜியாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வரத விகாஸ் பப்ளிக் பள்ளி
குன்னம் அருகே உள்ள வரிசைபட்டி வரத விகாஸ் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளி தாளாளர் எம்.என்.ராஜா தலைமை தாங்கி பள்ளியின் குழு பேரவை மற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், பெண் விடுதலை குறித்தும், மாணவர்கள் கல்வியோடு மட்டும் அல்லாமல் சிறந்த குடிமக்களாக வளர வேண்டும் என்றார். விழாவில் மாணவ-மாணவிகளின் சுதந்திர தின விழா குறித்து மும்மொழி உரைகளும், மும்மொழி பாடல்களும், குழு நடனங்களும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சுதந்திர தினத்தையொட்டி நடைப்பெற்ற கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், வரதராஜன் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.