பெரம்பலூர்
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
|தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் சார்பாக 77-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசன் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
நமது இந்தியா என்பது பல்வேறு மதங்கள், சாதிகள், இனங்கள், மொழிகள், கலாசாரங்கள், பழக்க வழக்கங்கள் கொண்ட மக்கள் வாழும் நாடு. ஆனால் வேற்றுமையில் ஒற்றுமையை கடைபிடித்து சமூக நல்லிணக்கத்துடன் வாழ்வதே நமது நாட்டின் அழகு மற்றும் பெருமையுமாகும். இந்த அழகும் பெருமையும் சீரழிந்து போகாமல் பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையுமாகும். வறுமை, கல்வியறிவின்மை, தீண்டாமை போன்றவற்றை சமூகத்தின் வேர்களில் இருந்து அழித்தொழிப்பது நம் கையில்தான் உள்ளது. கல்வி ஒன்று மட்டும்தான் இந்த மாற்றத்தைக் கொண்டுவர நம்மிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம். கல்வி எனும் ஆயுதம் மூலம் நாம் எதிர்பார்க்கும் அனைத்து மாற்றங்களையும் கொண்டுவரமுடியும். தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் திறமையான மாணவர்களை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் மனிநேயமுள்ள, இரக்கமுள்ள இதயங்களையும் உருவாக்குகிறோம். மாணவர்களாகிய நீங்கள்தான் நாளைய தலைவர்கள், எனவே எந்த சூழலிலும் சமூக பொறுப்புடன் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, தேசப்பற்றை பறைசாற்றும் வகையில் மாணவ-மாணவிகளின் சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் மாநில, தேசிய அளவில், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனைகளை புரிந்த மாணவ-மாணவிகளுக்கு வேந்தர் சீனிவாசன் பரிசுகளை வழங்கினார்.
இந்த விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக இணை வேந்தர் அனந்ததலட்சுமி கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமத்தின் செயலர் நீலராஜ், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் நிவானி கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் முதன்மை நிதி அலுவலர் ராஜசேகர், தனலட்சுமி சீனிவாசன் இனஸ்டிடியுட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ஹாஸ்பிட்டல் டீன் டாக்டர் விஸ்வநாதன் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்குமார் மற்றும் முதல்வர்கள், துணை முதல்வர்கள், புலமுதல்வர்கள், தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.