< Back
மாநில செய்திகள்
மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா
திண்டுக்கல்
மாநில செய்திகள்

மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா

தினத்தந்தி
|
13 Aug 2022 10:19 PM IST

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் சுதந்திர தினவிழாவில் கலெக்டர் விசாகன் தேசியகொடி ஏற்றுகிறார்.

சுதந்திர தினவிழா

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், நாளை (திங்கட்கிழமை) காலை 9.05 மணிக்கு சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. விழாவில் மாவட்ட கலெக்டர் விசாகன் தேசியகொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். இதையடுத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக் கொள்கிறார்.

பின்னர் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை கலெக்டர் வழங்குகிறார். இதை தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதையொட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் போலீசார் நேற்று அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

பலத்த பாதுகாப்பு

இதற்கிடையே சுதந்திர தினவிழாவையொட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் மைதானத்தை சுற்றிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பழனி முருகன் கோவில், அணைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதுதவிர மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் முக்கிய இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலும், கொடைரோடு ரெயில்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையிலும் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.

பழனி முருகன் கோவில்

தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த ஆன்மிக தலமாக விளங்கும் பழனி முருகன் கோவிலிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் கோவிலின் தங்க கோபுரம் பகுதியில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மின்இழுவை ரெயில் நிலையம், படிப்பாதை வழியாக வரும் பக்தர்கள் 'மெட்டல் டிடெக்டர்'கருவி மூலம் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். அங்கு அவர்கள் கொண்டு வரும் பொருட்களும் சோதனை செய்யப்படுகிறது.

இதேபோல் மாவட்டத்தின் எல்லையில் உள்ள 11 சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும வாகன சோதனை நடத்தப்படுகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மேற்பார்வையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்