< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்

அரியலூரில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தேசியக்கொடி ஏற்றினார்

தினத்தந்தி
|
16 Aug 2023 12:04 AM IST

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். பின்னர், 93 பயனாளிகளுக்கு ரூ.1½ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அணிவகுப்பு மரியாதை

அரியலூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீசார், ஊர்க்காவல்படை, தீயணைப்பு மற்றும் மீட்பு படை, சாரண-சாரணியர், செஞ்சிலுவை சங்கம் மற்றும் என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

விழாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலை வகித்தார். அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன்பின்னர் சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்கள், தேசியக்கொடி நிறத்திலான பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

நலத்திட்ட உதவிகள்

இதையடுத்து, பல்வேறு துறைகளின் சார்பில் 93 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே, 56 லட்சத்து 67 ஆயிரத்து 575 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 31 போலீசாருக்கும், அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 255 அரசு அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இதில் ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முருகன், ஜெயங்கொண்டம் நகராட்சி வருவாய் உதவி ஆய்வாளர் தங்க சரஸ்வதி ஆகியோர் சிறப்பாக பணியாற்றியதற்கு வாழ்த்து தெரிவித்து, பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார். இதனைதொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளின் தேசப்பற்று நடனம், சாகச நிகழ்ச்சிகள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார்.

இந்தநிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் (பொறுப்பு) பாலமுரளி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ஆர்.டி.ஓ.க்கள், சுகாதாரத்துறை, கல்வித்துறை உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்