< Back
மாநில செய்திகள்
சுதந்திர தின விழா கொண்டாட்டம்
திருச்சி
மாநில செய்திகள்

சுதந்திர தின விழா கொண்டாட்டம்

தினத்தந்தி
|
16 Aug 2022 2:29 AM IST

சுதந்திர தின விழா கொண்டாட்டப்பட்டது.

சுதந்திர தின விழா

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து போலீசாரின் மரியாதையை ஏற்று கொண்டு, போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் சுதந்திர உணர்வை வெளிப்படுத்தும் விதமாக மூவர்ண பலூன்களையும், சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்களையும் வானில் பறக்கவிட்டார்.

இதனை தொடர்ந்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வனத்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை, சுகாதார நலப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்பட 25 ஆண்டுகள் மாசற்ற முறையில் சிறப்பாக பணியாற்றிய 318 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

மேலும், வருவாய்த்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், சமூகநலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். முன்னதாக சுதந்திர தினத்தையொட்டி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள முதலாம் உலகப்போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் கலெக்டர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திருச்சி மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கு சென்று, அவர்களுக்கு உயர் அலுவலர்களால் பொன்னாடை அணிவிக்கப்பட்டு, நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

விழாவில் மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, போலீஸ் துணை கமிஷனர்கள் ஸ்ரீதேவி, சுரேஷ்குமார், அன்பு, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி மற்றும் அதிகாரிகள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மரக்கன்றுகள் நடும் பணி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு ஏழை, எளியோருக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகளை கலெக்டர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன் ஆகியோர் வழங்கினர். பின்னர் பொதுமக்களுடன் பொது விருந்தில் பங்கேற்று உணவு உட்கொண்டனர். அப்போது இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

இதையடுத்து திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பழமரப்பூங்காவில் 75 வகையான பழ மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்து, ஒவ்வொரு பழமரக்கன்று வளர்ப்பிற்கும் ஒவ்வொரு துறைகளின் அலுவலர்களை பொறுப்பாளர்களாக நியமித்து பழ மரக்கன்றுகளை வளர்த்திட அவர் அறிவுறுத்தினார். மேலும் சுற்றுப்புறச்சூழலை பாதுகாத்திடும் வகையில் மீண்டும் மஞ்சப்பையை அனைத்து அலுவலர்களுக்கும் அவர் வழங்கினார்.

மேலும் செய்திகள்