தூத்துக்குடி
தூத்துக்குடியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: கலெக்டர் செந்தில்ராஜ் தேசிய கொடியேற்றினார்
|தூத்துக்குடியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கலெக்டர் செந்தில்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து ரூ.83 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தூத்துக்குடியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கலெக்டர் செந்தில்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து ரூ.83 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சுதந்திரதின விழா
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மாவட்ட விளையாட்டு அரங்கத்துக்கு காலை 9 மணிக்கு வந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து புறாக்கள், வண்ண பலூன்களை பறக்க விட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.83 லட்சத்து 39 ஆயிரத்து 992 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பாராட்டு
மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 62 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களையும். வருவாய் துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, செய்திமக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 542 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கி பாராட்டினார்.
மேலும் தியாகிகளின் வாரிசுகளுக்கு அந்தந்த பகுதி தாசில்தார்கள் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் தேசபக்தியை பறைசாற்றும் வகையில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிறப்பாக கலை நிகழ்ச்சிகள் நடத்திய பள்ளி ஆசிரியர்களும் பாராட்டப்பட்டனர்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட வன அலுவலர் அபிசேக் டோமர், மாவடட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் செல்வக்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சிவகாமி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் பாபு, தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.