விழுப்புரம்
விழுப்புரத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
|விழுப்புரத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் நேற்று காலை சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் மோகன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு மாவட்ட கலெக்டர் டி.மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுடன் திறந்த ஜீப்பில் சென்று காவல்த்துறை, வனம், தீயணைப்பு ஆகிய துறையினர் ஊர்காவல், தேசிய மாணவர் படையினர், இளம் செஞ்சிலுவை சங்கத்தினர் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து பரிசுகளை வழங்கினார்.
இதில் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் வசித்து வரும் சுதந்திர போராட்ட தியாகி இஸ்மாயில்கானின் வாரிசுதாரரான அவரது மனைவி பாத்திமாபீவிக்கு அவரது வீட்டிற்கே கலெக்டர் டி.மோகன் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தி நினைவுப்பரிசு வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
அதன் பிறகு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 388 பேருக்கு நற்சான்றிதழை மாவட்ட கலெக்டர் டி.மோகன் வழங்கினார்.
அதனை தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ஏழை, எளிய மக்கள் 198 பேருக்கு உதவித்தொகை, 1 கோடியே 66 லட்சத்து 85 ஆயிரத்து 465 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கலைநிகழ்ச்சிகள்
தொடர்ந்து மாணவ- மாணவிகளின் பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், தமிழக பாரம்பரிய கலையான மல்லர்கம்ப கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவர்கள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை கலெக்டர் டி.மோகன் வழங்கினார்.
விழாவில் துரை.ரவிக்குமார் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நிலஎடுப்பு) சரஸ்வதி, எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், புகழேந்தி, சிவக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஷீலாதேவிசேரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தாசில்தார் ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக விழுப்புரம் நகரில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு கலெக்டர் டி.மோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.