கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் சுதந்திர தின விழா:கலெக்டர் ஷ்ரவன்குமார் தேசியக்கொடி ஏற்றினார்
|கள்ளக்குறிச்சியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஷ்ரவன்குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
போலீசார் அணிவகுப்பு
நாடு முழுவதும் நேற்று சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கள்ளக்குறிச்சி- கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் முன்னிலையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து அவர், தேசியக்கொடியின் மூவர்ண பலூன்களை பறக்க விட்டதுடன், உலக சமாதானத்தை பறைசாற்றும் விதமாக வெண் புறாக்களையும் பறக்க விட்டார். இதையடுத்து கலெக்டர் ஷ்ரவன்குமார் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
137 பேருக்கு பாராட்டு சான்றிதழ்
அதன் பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, தீயணைப்பு, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, செய்தித்துறை, மருத்துவத்துறை, வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவு, வங்கி, மாவட்ட கருவூலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, கல்வித்துறை உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 137 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
மேலும் விழாவின்போது அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ- மாணவிகளின் பரதநாட்டியம், குழு நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மாணவர்கள் மல்லர் கம்பம் ஏறுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதன்பிறகு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
நினைவு பரிசு
இதுதவிர சுதந்திர தின விழா அணிவகுப்பில் பங்கு பெற்ற காவலர்கள், சுதந்திர தின விழா நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய அரசு பள்ளி ஆசிரியர்கள் மணிமேகலை, அமுதன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா, ஒன்றிய குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், நகரமன்ற தலைவர் சுப்ராயலு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, சமூக நல அலுவலர் தீபிகா, தனித்துணை ஆட்சியர் ராஜவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மற்றும் காவல்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.