< Back
மாநில செய்திகள்
சிவகாசி-சாத்தூர் ரோட்டில் அதிகரித்து வரும் விபத்துகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

சிவகாசி-சாத்தூர் ரோட்டில் அதிகரித்து வரும் விபத்துகள்

தினத்தந்தி
|
7 Nov 2022 12:43 AM IST

போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் சிவகாசி- சாத்தூர் ரோட்டில் விபத்துகள் அதிகரித்து வருகிறது.

சிவகாசி,

போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் சிவகாசி- சாத்தூர் ரோட்டில் விபத்துகள் அதிகரித்து வருகிறது.

பட்டாசு ஆலைகள்

சிவகாசி-சாத்தூர் ரோட்டில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு ஏராளமான பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த சாலையில் 2 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளது. இந்த ரோட்டில் 24 மணி நேரமும் போக்குவரத்து உள்ளது.

சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு கப்பல் மூலம் கொண்டு செல்ல வசதியாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு செல்ல சரக்கு வாகன ஓட்டிகள் இந்த சாலையை தான் பயன் படுத்துகிறார்கள். அதேபோல் சிவகாசியில் உள்ள 800-க்கும் மேற்பட்ட அச்சகங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் கொண்டு வரும் போது சரக்கு வாகனங்கள் இந்த சாலையை தான் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

மின்விளக்கு

இப்படி முக்கியத்துவம் கொண்ட இந்த சாலையில் இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வெளிச்சம் இருப்பது இல்லை. இதனால் சாலை ஓரம் நடந்துசெல்பவர்களும், இலகுரக வாகனங்களில் செல்பவர்களும் விபத்துகளில் சிக்கி காயம் அடையும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. சில நேரங்களில் விபத்தில் சிக்கியவர்களை மீட்ககூட வாய்ப்பு இல்லாமல் நீண்ட நேரம் கழித்து மீட்டு சிகிச்சைக்கு அனுப்பும் நிலையும் தொடர்கிறது.

இந்த பகுதியில் கடந்த காலங்களில் அதிகளவில் வேகத்தடை இருந்தது. பின்னர் புதிய சாலை அமைக்கும் போது வேகத்தடைகளை மீண்டும் போடாமல் விட்டுவிட்டனர். இதனால் இந்த பகுதியை கடக்கும் கனரக வாகனங்கள் மிகுந்த வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

தடுப்பு கம்பி

எனவே சிவகாசி-சாத்தூர் ரோட்டில் நடைபெறும் விபத்துகளை குறைக்கும் பொருட்டு சில குறிப்பிட்ட இடங்களில் தடுப்பு கம்பிகள் வைக்கவும், போதுமான அளவு தெருவிளக்குகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சிவகாசி, சாத்தூர் உட்கோட்ட போலீசார் தங்கள் எல்லை பகுதியில் வேகதடுப்பு கம்பிகளை வைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்