அரியலூர்
நீர்நிலைகளில் அதிகரித்து வரும் உயிரிழப்புகள்
|அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆறு உள்ளது. இந்தநிலையில் நீர்நிலைகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மதுபோதையில் உற்சாகம்
குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் கோடை விடுமுறை நாட்களில் இளைஞர்கள் பலர் ஆறு மற்றும் நீர்த்தேக்கங்களில் குளிக்க செல்கிறார்கள். அப்போது ஆர்வமிகுதியால் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி உயிரை இழக்கிறார்கள். இதற்கு ஆற்றில் இறங்கும்போது எங்கு ஆழமான பகுதி இருக்கிறது. எங்கு சுழல் இருக்கிறது என்ற விழிப்புணர்வு இல்லாததே முக்கிய காரணமாகும். மேலும், நீச்சல் தெரியாத நிலையில் ஆற்றில் இறங்கி உற்சாகமாக குளிக்கும்போது, ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்.
வெளியூர்களில் இருந்து சுற்றுலா வரும் சில வாலிபர்கள் ஆற்றில் இறங்கி நண்பர்களுடன் மகிழ்ச்சியாக குளிக்கிறார்கள். சிலசமயங்களில் அவர்கள் மது அருந்திவிட்டு ஆற்றுக்குள் இறங்குவதும் உண்டு. இதனால் பயத்தை உணராமல் கண்மூடித்தனமாக ஆற்றில் இறங்கி புதைமணலுக்குள் சிக்கி கொள்கிறார்கள். தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பெரும்பாலான மாணவர்கள் நண்பர்களுடன் ஆற்றுக்கு சென்று குளித்து மகிழ்வார்கள். அவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். ஆபத்தான பகுதிகளில் குளிக்கும் மாணவர்களையும், இளைஞர்களையும் போலீசார் அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
உடல் வலிமை
தா.பழூர் அருகே உள்ள கீழக்குடிக்காடு சமூக ஆர்வலர் ஜெயசேகரன்:- நீச்சல் பயிற்சி இல்லாமல் குழந்தைகள் வளர்க்கப்படுவது அவர்களது எதிர்கால பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் சிறுவர்- சிறுமிகள் கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய நீர்நிலைகளில் நீச்சல் பயின்று வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் கிராமங்களில் கூட நீச்சல் பயிற்சி செய்யும் சிறுவர்-சிறுமிகள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றனர். நீச்சல் பயிற்சி மேற்கொள்வது உடல் வலிமையை அதிகப்படுத்துகிறது. எனவே பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தேவையான பாதுகாப்பு பயிற்சிகள் அனைத்தையும் வழங்க வேண்டும்.
தற்காப்பு கலைகள்
இடங்கண்ணி கிராமத்தை சேர்ந்த ஆனந்தன்:- பிள்ளைகளின் அனைத்து வகையான பாதுகாப்பு அம்சங்களையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களாகிய எங்களுக்கு உண்டு. இப்போதெல்லாம் படித்த நேரம் போக மீதமுள்ள நேரங்களில் வெளியில் சென்று விளையாடுவதை கூட விரும்பாமல் வீடுகளுக்குள் செல்போன்களில் விளையாடுவதையே இளம் தலைமுறையினர் அதிகம் விரும்புகின்றனர். அவர்களது உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்த விரும்பும் பெற்றோர்கள் நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பாதுகாப்பு கலைகளை அவர்களுக்கு கற்றுத்தர முன்வர வேண்டும். சிறுவர்- சிறுமிகளும் செல்போனில் மூழ்கி கிடக்காமல் இதுபோன்ற தற்காப்பு கலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
சமூக ஆர்வலர்கள்:- நீர்நிலைகளில் கரையோரங்களில் தூா்வாருகிறோம் என்ற பெயரில் ஆழப்படுத்துவதை தடுக்க வேண்டும். வண்டல் மண் நீர்நிலைகளின் மையப்பகுதியில் தான் எடுக்க வேண்டும். நீர்நிலைகளின் கரையோரத்தில் ஆழப்படுத்துவது, வண்டல் மண் எடுப்பது போன்றவற்றால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் குடிக்க வருபவர்கள், கை, கால்களை கழுவ வருபவர்கள் தவறி விழுந்து இறக்க நேரிடும். ேமலும் தண்ணீர் குடிக்க வரும் கால்நடைகளும் உயிரிழக்க நேரிடும். நீர்நிலைகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடையே மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நீர்நிலைகளின் முன்பு நின்று கொண்டு ஆபத்தை உணராமல் செல்போனில் செல்பி எடுப்பதை முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு முதலில் நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டியது கட்டாயம். குழந்தைகள், மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர், உறவினர்களுடன் தான் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.