< Back
மாநில செய்திகள்
கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
மாநில செய்திகள்

கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தினத்தந்தி
|
11 July 2022 10:56 AM IST

இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 74,323 ஆயிரம் கனஅடி நீர் அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

பென்னாகரம்,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து இன்றுகாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 50,573 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதே போல் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 23,750 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 74,323 ஆயிரம் கனஅடி தண்ணீர் அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

மேலும் கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் அளவை பொறுத்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு கூடுதலாகவும், குறைவாகவும் மாறி மாறி திறக்கப்படுகிறது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் நேற்று மாலை 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. காவிரி ஆற்றில் இருகரையையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மெயின்அருவி, சீனிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 2-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை பூட்டப்பட்டது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பரிசல் ஓட்டிகள் பரிசல்களை மேடான பகுதிக்கு எடுத்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் மேடான பகுதிக்கு பரிசல்களை சுமந்து சென்று வைத்தனர்.

மாவட்ட நிர்வாகம் அருவியில் குளிக்க தடைவிதித்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நீர்வரத்து அதிகரித்து வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

காவிரி ஆற்றில் ஓரமாக குளிக்க கூடாது என ஒலி பெருக்கி மூலம் தெரிவித்தும் வருகின்றனர். மேலும் அதிகாரிகள் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்