கடலூர்: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
|கடலூர் அருகே ஆற்றுத் தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்
சென்னை,
கடலூர் அருகே அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில், இன்று காலை அதே பகுதியை சேர்ந்த பெண் பிரியா, மாணவிகள் மோனிசா, சங்கவி, சுமுதா, காவியா, பிரியதர்ஷிணி, நவி ஆகியோர் தடுப்பணையில் குளிக்க சென்றனர். அப்போது அவர்கள் ஆழமான பகுதியில் இறங்கினர்.
இதனால் அவர்கள் தண்ணீரில் மூழ்கினார்கள். சத்தம்கேட்டு திரண்ட கிராம மக்கள், உடனடியாக ஆற்றில் மூழ்கிய 7 பேரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிறுமிகள் உள்பட 7 பேரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார். இதையடுத்து ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூ. 5 லட்சம் நிதியுதவியை ரூ. 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "கடலூர் அருகே கீழ் அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில் கெடிலம் ஆற்றில் குளிக்க சென்ற அதே பகுதியை சேர்ந்த மோனிசா, சங்கவி, சுமிதா, காவியா, பிரியதர்ஷிணி, நவநீதம் மற்றும் பிரியா, ஆகிய 7 பேர் ஆழமான பகுதியில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்வதுடன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு அறிவித்துள்ள 5 லட்சம் நிதியை 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன்." என்று கூறியுள்ளார்.