சென்னை
கோடை காலத்தில் தண்ணீர் பயன்பாடு அதிகரிப்பு எதிரொலி: சென்னை குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு 60 சதவீதத்துக்கு கீழ் குறைந்தது
|கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் தண்ணீர் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 60 சதவீதத்துக்கு கீழ் குறைந்தது.
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11.757 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்த நிலையில் தற்போது கோடை காலம் நிலவி வருவதால் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் தண்ணீர் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 60-வது சதவீதத்துக்கும் கீழ் குறைந்துவிட்டது.
இந்த 5 ஏரிகளிலும், தற்போது 6.908 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 58 சதவீதம் ஆகும். குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வந்தாலும், தற்போது கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
மேலும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் போதுமான தண்ணீர் உள்ளதால் எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி. ஆகும். இதில் 1.135 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நீர் வினாடிக்கு 135 கன அடி வந்து கொண்டிருக்கிறது. சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1.081 டி.எம்.சி.யில் 708 மில்லியன் கனஅடியும், புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3.300 டி.எம்.சி.யில் 2.251 டி.எம்.சி.யும், செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3.645 டி.எம்.சி.யில் 2.354 டி.எம்.சி. தண்ணீரும் இருப்பு உள்ளது. கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவு 500 மில்லியன் கனஅடியில் 460 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.