செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 500 கன அடியாக அதிகரிப்பு
|செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி நீர் வெளியேற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்ளாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் கடந்த 2-ந்தேதி ஏரியிலிருந்து முதற்கட்டமாக 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து நீர் வரத்து வந்து கொண்டிருப்பதாலும் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருப்பதாலும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பதை 500 கன அடியாக உயர்த்த காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை 10 மணிஅளவில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 500 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது.
மேலும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் உபநீர் திறப்பது அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வரும் நாட்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.