தேனி
முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி
|நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பு
தமிழக-கேரள எல்லையில் 152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. தென்மேற்கு பருவமழை காலத்தில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரவில்லை. இதற்கிடையே கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதனால் அணைக்கு சற்று நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 12-ந்தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 122 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 866 கன அடியாக இருந்தது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அத்துடன் அணையின் நீர்மட்டம் உயரத்தொடங்கியது. நேற்றைய நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.80 அடியை எட்டியது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,401 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது அணையில் இருந்து வினாடிக்கு 1,300 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- பெரியாறு 17.4, தேக்கடி 2.4, உத்தமபாளையம் 0.8, சண்முகாநதி அணை 1, போடி 15.4, வைகை 64, மஞ்சளாறு 15, சோத்துப்பாறை 95, பெரியகுளம் 89.2, வீரபாண்டி 4.8, அரண்மனைபுதூர் 13.8, ஆண்டிப்பட்டி 31.6.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதாலும், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.