< Back
மாநில செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 13 கன அடியாக அதிகரிப்பு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 13 கன அடியாக அதிகரிப்பு

தினத்தந்தி
|
11 July 2022 9:42 AM IST

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூர்,

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நேற்று மாலை 42 ஆயிரத்து 633 கன அடி தண்ணீர் வந்தது. அணை நீர்மட்டம் 123.10 அடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து 26 ஆயிரத்து 143 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதே போல கபினி அணைக்கு நேற்று மாலை 26 ஆயிரத்து 583 கன அடி தண்ணீர் வந்த நிலையில் அணை நீர்மட்டம் 63.66 அடியாக இருந்தது. இந்த அணையில் இருந்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. 2 அணைகளிலும் இருந்தும் 51 ஆயிரத்து 143 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் காவிரியில் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது. கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வரத்தொடங்கி உள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை 10 அயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதையடுத்து அருவியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 2 ஆயிரத்து 141 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 3 ஆயிரத்து 143 கன அடியாக அதிகரித்தது.


இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து 8 ஆயிரத்து 13 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் நாளைக்குள் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 98.29 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 98 அடியானது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்