மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,750 கன அடியாக அதிகரிப்பு
|தொடர்ந்து 30-வது நாளாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.
மேட்டூர்,
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனிடையே ஒகேனக்கல் முதல் மேட்டூர் வரையிலான காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் அதே அளவு தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதமும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 750 கன அடி வீதமும் என மொத்தம் 15,750 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளன.
தொடர்ந்து 30-வது நாளாக அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது. அணை முழுவதும் நிரம்பி உள்ளதால் கடல் போல காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.