மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14 ஆயிரத்து 159 கன அடியாக அதிகரிப்பு
|மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14 ஆயிரத்து 159 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர்,
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதையடுத்து அந்த அணைகளில் இருந்து கடந்த சில நாட்களாக 17 ஆயிரத்து 960 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் தற்போது நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியாக உள்ளது.
இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரியிலும் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி 7-வது நாளாக இன்றும் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தபடி உள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 13 ஆயிரத்து 638 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 14 ஆயிரத்து 159 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரியில் 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று 55.14 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 55.64 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.