மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12 ஆயிரத்து 303 கன அடியாக அதிகரிப்பு
|மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 118.70 அடியாக இருந்த நிலையில், இன்று மேலும் உயர்ந்து 118.76 அடியாக உள்ளது.
மேட்டூர்,
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து 5 ஆயிரம் கன அடி உபரி நீர் தற்போது காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதற்கிடையே கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்வதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்லில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 9 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது 14 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ள இந்நிலையில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் அமர்ந்து உற்சாகமாக படகு சவாரி சென்று அருவியின் அழகை பார்த்து ரசித்து வருகிறார்கள். ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 11 ஆயிரத்து 700 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மேலும் அதிகரித்து 12 ஆயிரத்து 303 க ன அடியாக வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்கு நேற்று 10 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 900 கன அடி தண்ணீரும் என மொத்தம் 10 ஆயிரத்து 900 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது .
இன்றும் அதே அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 118.70 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 118.76 அடியானது.
இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.