< Back
மாநில செய்திகள்
கொடைக்கானல் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கொடைக்கானல் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தினத்தந்தி
|
13 Oct 2023 5:00 AM IST

தொடர்மழை எதிரொலியாக கொடைக்கானலில் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் மலைப்பாதையில் மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்மழை

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. அதன் பின்னர் நேற்று அதிகாலை 4 மணி வரை நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக நகரில் உள்ள நீரோடைகள் மற்றும் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

குறிப்பாக வட்டக்கானல் அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, தேவதை அருவி, பியர்சோலா அருவி, கோம்பை அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் அதிக அளவில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

'செல்பி' எடுத்தனர்

மேலும் அருவிகள் முன்பு நின்று தங்களின் செல்போன்களில் 'செல்பி' எடுத்து உற்சாகமாக பொழுதை கழிக்கின்றனர். மழை காரணமாக ஏரிச்சாலையில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடைபயிற்சி செய்பவர்கள் சிரமப்படுகின்றனர். மேலும் நகரின் பல்வேறு இடங்களில் மரக்கிளைகளும் முறிந்து சாலையில் விழுந்தன. அவற்றை நகராட்சி நிர்வாகத்தினரும், நெடுஞ்சாலைத்துறையினரும் விரைந்து அகற்றினர்.

மரம் சாய்ந்து விழுந்தது

இதேபோல் பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பண்ணைக்காடு, கே.சி.பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மேலும் காற்றும் சுழன்று அடித்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தடியன்குடிசை, கானல்காடு பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதனால் பெரும்பாறை-தாண்டிக்குடி மலைப்பாதையில் தடியன்குடிசை அருகே இரவு 11.30 மணி அளவில் சாலையோரத்தில் உள்ள ராட்சத மரம் வேரோடு சாய்ந்து மலைப்பாதையின் குறுக்கே விழுந்தது. இதன்காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மலைப்பாதையின் இருபுறமும் பஸ், லாரி, கார் என வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

மின்சாரம் துண்டிப்பு

இதுமட்டுமின்றி மரம் சாய்ந்து விழுந்ததில் மின்சார கம்பிகளும் அறுந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாண்டிக்குடி போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் பொதுமக்கள் மற்றும் மரஅறுவை எந்திரங்கள் உதவியுடன் மலைப்பாதையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர். இந்த பணி நேற்று காலை 8.30 மணி வரை நடந்தது. அதன் பின்னரே அப்பகுதியில் போக்குவரத்து சீரடைந்தது. மலைப்பாதையில் மரம் விழுந்ததால் இரவு முழுவதும் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் முடங்கி கிடந்தனர். பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்