வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
|வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தேனி,
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்கும் வகையில் வைகை அணையில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி 15 நாட்களுக்கு 3 கட்டங்களாக தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக ராமநாதபுரம் மாவட்ட தேவைக்காக கடந்த 10-ந்தேதி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதன்படி ராமநாதபுரம் மாவட்ட தேவைக்காக 5 நாட்களில் மொத்தம் 915 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதே போல் சிவகங்கை மாவட்ட தேவைக்காக 4 நாட்களில் 376 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும் 21-ந்தேதி முதல் 6 நாட்களுக்கு மதுரை மாவட்ட தேவைக்காக 209 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் நீர்நிலைகளின் அருகே கால்நடைகளை கட்டிவைக்க வேண்டாம் எனவும், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் எனவும் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் காவல்துறையினர் ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி ஒலிப்பெருக்கி மூலம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.