< Back
மாநில செய்திகள்
ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
நீலகிரி
மாநில செய்திகள்

ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

தினத்தந்தி
|
16 Oct 2023 3:00 AM IST

கூடலூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

கூடலூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

நீர்நிலைகள் வறண்டன

கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்வது வழக்கம். ஆனால், நடப்பு ஆண்டில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் கூடலூர் பகுதியில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. போதிய மழை பெய்யாததால் குறு மிளகு விளைச்சல் உள்பட விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் கேரள மாநிலம் மலப்புரம், வயநாடு உள்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன் தாக்கத்தால் அம்மாநிலத்தையொட்டி உள்ள கூடலூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 5.45 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் கூடலூர் பகுதியில் உள்ள பாண்டியாறு, மாயாறு உள்பட அனைத்து ஆறுகள், தடுப்பணைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதேபோல் கூடலூர் அருகே பாடந்தொரை பகுதியில் வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டதால், ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் கோவில் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் சென்றது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் சீராக செல்ல முடியாமல் இருந்தது. இதேபோல் சுற்றுவட்டார பகுதிகளிலும் நீர் நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மண் சரிவு

கோத்தகிரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் கெங்கரை அம்பாள் காலனி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. அதே பகுதியில் சில குடியிருப்புகளுக்கு செல்ல அமைக்கப்பட்டு இருந்த பாலம் இடிந்து விழுந்தது. மேலும் பர்ன்சைடு கிராமத்தில் மூதாட்டி ஒருவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது. நேற்றும் பலத்த மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி, கோடநாட்டில் 96 மி.மீ., கோத்தகிரி மற்றும் கீழ் கோத்தகிரி பகுதிகளில் 43 மி.மீ. மழை பதிவானது.

மேலும் செய்திகள்