திண்டுக்கல்
கொடைக்கானல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
|தொடர் மழை காரணமாக கொடைக்கானல் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 3 மணிக்கு மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் மழை நீடித்தது. மழையின் காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதேபோல் வட்டக்கானல் அருவி, பாம்பார் அருவி, தேவதை அருவி, கோம்பை அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அருவிகளை தேடி வரும் சுற்றுலா பயணிகள் நீர் கொட்டும் அழகை பார்த்து ரசித்தனர். மேலும் அவர்கள் அருவி முன்பு நின்று 'செல்பி' மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் வட்டக்கானல் அருவியில் சுற்றுலா பயணிகள் நீராடியும் உற்சாகமடைந்தனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் குளுமையான சூழல் நிலவி வருகிறது.