< Back
மாநில செய்திகள்
வருகிற 1-ந்தேதி முதல் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

வருகிற 1-ந்தேதி முதல் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

தினத்தந்தி
|
25 March 2023 1:07 AM IST

வருகிற 1-ந்தேதி முதல் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது என்று நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருக பிரசன்னா தெரிவித்து உள்ளார்.

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருக பிரசன்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

அகவிலைப்படி உயர்வு

கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள் போன்ற பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வருகிற 1-ந்தேதி (சனிக்கிழமை) முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

திரையரங்க நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பிரதி மாதம் ரூ.9,679, பயிற்சி நிறுவன தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5,126, சமையல் எரிவாயு வினியோகம் செய்யும் தொழிலாளர்களுக்கு ரூ.5,008, ஆஸ்பத்திரி பணியாளர்களுக்கு ரூ.8,462, உணவு நிறுவன தொழிலாளர்களுக்கு ரூ.7,263, பொது மோட்டார் போக்குவரத்து நிறுவன தொழிலாளர்களுக்கு ரூ.10,307, பாதுகாவல் பணியாளர்களுக்கு ரூ.7,096, கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.5,087 அகவிலைப்படியாக உயர்த்தி வழங்க வேண்டும்.

பீடி தொழிலாளர்கள்

பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு 1,000 பீடிகள் சுற்றுவதற்கு ரூ.136.95, உள்பணியாளர்களுக்கு ரூ.6,735 அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும். இந்த தொழிலாளர்களுக்கு அடிப்படை ஊதியத்துடன், உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வருகிற 1-ந்தேதி முதல் வழங்கிட வேண்டும்.

அகவிலைப்படியுடன் குறைந்தபட்ச ஊதியத்தையும் சேர்த்து வருகிற 1-ந்தேதி முதல் தொழிலாளர்களுக்கு வழங்க தவறினால், அந்த நிறுவனங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்