விழுப்புரம்
அரிசி, மளிகை பொருட்களின் விலை அதிகரிப்பு
|அண்டை மாநிலங்களில் இருந்து வரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசுக்கு 'பட்ஜெட்' எப்படி முக்கியமோ, அதுபோல குடும்பங்களில் இல்லத்தரசிகளுக்கு மாதாந்திர வீட்டு 'பட்ஜெட்'டும் மிகவும் முக்கியமானது. 'பட்ஜெட்'டில் எப்போதுமே முதலிடம் என்றால், அது மளிகை பொருட்களுக்குத்தான் இருக்கும். மளிகை பொருட்களை வாங்கி சமையலறையில் இருப்பு வைத்தாலே, இல்லத்தரசிகளுக்கு பாதி நிம்மதி கிடைத்துவிடும்.
அவ்வப்போது மளிகை பொருட்களின் மீதான விலையேற்றம் ஏற்படும் போதெல்லாம் 'பட்ஜெட்'டில் துண்டு விழும். அப்போது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியே மேலோங்கும். இதனால் சமையலில் பயன்படுத்தும் பொருட்களின் அளவும் குறையத்தொடங்கும். அப்படி ஒரு நிலைதான் தற்போது ஏற்பட்டிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை அதிகரித்திருக்கிறது. இதுகுறித்து விழுப்புரம் நகர மளிகை வியாபாரிகள் சங்க செயலாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது:-
காரணம் என்ன?
பொதுவாக மளிகைப்பொருட்களை பொறுத்தவரை விழுப்புரம் மாவட்டத்தில் புளி, உளுந்து, கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்டவைகளின் விளைச்சல் உள்ளது. மற்ற சில மளிகைப்பொருட்கள் தமிழகத்தின் பல இடங்களில் விளைச்சல் இருந்தாலும் பெரும்பாலான பொருட்கள் அண்டை மற்றும் வெளிமாநிலங்களின் வரத்துதான் இங்கு மளிகை பொருட்களின் விலையை தீர்மானிப்பதில் முக்கியத்துவம் பெறுகிறது. உதாரணத்திற்கு மிளகாய் ஆந்திரா மாநிலத்தில் இருந்தும், மல்லி ராஜஸ்தானில் இருந்தும், பருப்பு வகைகள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்துதான் வரத்து வருகிறது.
இந்த நிலையில் அண்டை மாநிலங்களில் விளைச்சல் குறைந்திருப்பதின் எதிரொலியாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. விழுப்புரத்திலும் மளிகை பொருட்களின் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. குறிப்பாக பருப்பு வகைகளில் துவரம் பருப்பு கிலோ ரூ.40 வரை உயர்ந்திருக்கிறது. இதற்கு முன்பு துவரம் பருப்பு கிலோ ரூ.125-க்கு விற்ற நிலையில் தற்போது ரூ.164 ஆக உயர்ந்திருக்கிறது. அதுபோல் சீரகத்தின் விலையும் வரலாறு காணாத வகையில் கிலோவுக்கு ரூ.140 வரை உயர்ந்திருக்கிறது. கடந்த மாதம் ரூ.400-க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.540-க்கு விற்பனை ஆகிறது. மிளகு விலையும் ரூ.50 வரை உயர்ந்துள்ளது. தற்போது நிலைமை ஓரளவுக்கு சீராகி வருகிறது. இருப்பினும் தட்டுப்பாடின்றியும், தடையின்றியும் மளிகை பொருட்களை விற்பனை செய்து வருகிறோம்.
அரிசி விலை உயர்வு
மேலும் அரிசியை பொறுத்தவரை விழுப்புரம் உள்பட தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து 50 சதவீதமும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து மீதமுள்ள 50 சதவீதமும் அரிசி வரத்து வருகிறது. தற்போது அரிசி கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை உயர்ந்திருக்கிறது. பிரியாணி அரிசியை பொறுத்தவரை ரூ.20 வரை உயர்ந்துள்ளது. 26 கிலோ கொண்ட ஒரு சிப்பம் சாதா பொன்னி அரிசி விலை ரூ.1,150-ல் இருந்து ரூ.1,300 ஆக விலை அதிகரித்துள்ளது. பச்சரிசி விலை ரூ.1,550 ஆக அதிகரித்திருக்கிறது. பாசுமதி அரிசி (30 கிலோ கொண்ட சிப்பம்) ரூ.3,200-ல் இருந்து ரூ.3,500 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் எண்ணெய் வகைகளான சன்பிளவர் ஆயில், பாமாயில் ஆகியவற்றின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாமாயில் லிட்டர் ரூ.120-க்கு விற்ற நிலையில் ரூ.30 குறைந்து தற்போது ரூ.90-க்கு விற்பனையாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விலை நிலவரம்
விழுப்புரம் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை நிலவரம் வருமாறு:- (கிலோவில்/ மொத்த விலையில்)
துவரம் பருப்பு- ரூ.164, சிறுபருப்பு- ரூ.110, உளுந்தம் பருப்பு- ரூ.125, உருட்டு கடலை (வெள்ளை கடலை பெரியது-ரூ.140, நடுத்தரம்- ரூ.110) சிவப்பு கடலை- ரூ.90, கடலை பருப்பு- ரூ.72, மிளகாய் தூள்- ரூ.390, தனியா தூள்- ரூ.210, மஞ்சள் தூள்- ரூ.130, சீரகம்- ரூ.540, சோம்பு- ரூ.280, கடுகு- ரூ.90, மிளகு- ரூ.560, வெந்தயம்- ரூ.100, ஆட்டா (10 கிலோ) - ரூ.400, மைதா (10 கிலோ) - ரூ.410, சர்க்கரை (50 கிலோ மூட்டை) - ரூ.1,925, வெல்லம்- ரூ.55, புளி- ரூ.120, பூண்டு (பெரியது- ரூ.130, சிறியது ரூ.100), முந்திரி (முழு- ரூ.700, உடைத்தது ரூ.600), திராட்சை- ரூ.240, பாமாயில்- ரூ.90, சன் பிளவர்- ரூ.112, நல்லெண்ணெய்- ரூ.340 முதல் ரூ.420 வரை, தேங்காய் எண்ணெய்- ரூ.220, டால்டா- ரூ.120, ஏலக்காய்- ரூ.1,600, நீட்டு மிளகாய்- ரூ.270, தனியா- ரூ.95, பச்சை பட்டாணி- ரூ.75, வெள்ளை பட்டாணி- ரூ.65, கருப்பு சென்னா- ரூ.90, சாதா பொன்னி (26 கிலோ மூட்டை) - ரூ.1,300, முதல் ரக பொன்னி- ரூ.1,450, பச்சரிசி- ரூ.1,550, பாசுமதி அரிசி ஒரு கிலோ ரூ.120, பிரியாணி அரிசி ஒரு கிலோ ரூ.125, இட்லி அரிசி (26 கிலோ மூட்டை) - ரூ.875.
போக்குவரத்து, வாகன வாடகை, ஆட்கள் கூலி போன்ற காரணங்களால் வெளிச்சந்தையில் மளிகை பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.