கோயம்புத்தூர்
நெகமத்தில் கோழிக்கொண்டை பூ சாகுபடி அதிகரிப்பு
|ஆயுத பூஜை பண்டிகை நெருங்கி வருவதையொட்டி நெகமத்தில் செவ்வந்தி, கோழிக் கொண்டை பூ அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
நெகமம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான வெள்ளாளபாளையம், குள்ளக்காபாளையம் ஆகிய பகுதிகளில் செவ்வந்தி, கோழிக்கொண்டை, அரளி, செண்டுமல்லி, உள்ளிட்ட பூக்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. ஆயுத பூஜையின் போது, செவ்வந்தி உள்ளிட்ட பூக்களுக்கு கிராக்கி இருக்கும் என்பதால் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மஞ்சள், வெள்ளை நிற செவ்வந்தி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படும். ஆட்கள் பற்றாகுறை, பருவம் தவறிய மழை உள்ளிட்ட காரணங்களினால் இந்தாண்டு வழக்கத்தைவிட பூ சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. இதனால், பூ வரத்து குறைந்துள்ளது.
இந்தநிலையில் ஆயுதபூஜையையொட்டி செவ்வந்தி, செண்டுமல்லி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்களுக்கான கிராக்கி அதிகரித்து வரும் என்பதால் நெகமம் மற்றும அதன் சுற்றுப்பகுதிகளில் செவ்வந்தி, கோழிக்கொண்டை பூ சாகுபடி செய்யப் பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- இங்கு பயிரிடப்படும் பூக்கள் மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று, கேரளாவுக்கு அனுப்பப்படும். ஆயுத பூஜை நெருங்கி வருவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், தேவை அதிகரித்து வரும். அக்டோபர் முதல் வாரத்தில் பூக்களை பறித்து, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படும். தேவை அதிகளவில் உள்ளதால், விலை உயரவும வாய்ப்புள்ளது. பண்டிகை நேரத்தில், கூடுதலாக விலை கிடைக்கும். ஆயுத பூஜை பண்டிகையையொட்டி பூ தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாலும், தேவை காரணமாகவும், விவசாயிகள் பூக்களை தேக்கி வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், சந்தைக்கு பூ வரத்து குறைந்துள்ளது. தற்போது விலையில் பெரிய மாற்றம் இல்லாமல், சீரான விலையே நீடித்து வருகிறது. நவராத்திரி விழா தொடங்கியதும் அனைத்து பூக்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.