கரூர்
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: நொய்யல் பகுதியில் தர்பூசணி விற்பனை அமோகம்
|வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் நொய்யல் பகுதியில் தர்பூசணி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
கரூர் மாவட்டத்தில் நொய்யல் மற்றும் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. நேற்று கரூர் மாவட்டத்தில் 104 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கோடை வெப்பத்தை தணிக்க தர்பூசணி பழங்களை பொதுமக்கள் அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர்.இதனால் கடலூர், திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தர்பூசணி பழங்கள் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளது.
விற்பனை அமோகம்
இதனால் நொய்யல், புன்னம் சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக வந்து குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த விற்பனை தற்போது அமோகமாக நடந்து வருகிறது. உடலில் சூட்டை தணிப்பதற்கு தண்ணீர்சத்து அதிகம் தேவைப்படுவதால் மேற்கண்ட பகுதி வழியாக வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்பவர்களும் தர்பூசணி பழங்களை விரும்பி வாங்கி செல்கின்றனர்.தர்பூசணி பழங்கள் சில்லறையாகவும், மொத்தமாகவும், துண்டு துண்டாகவும் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கிலோ ரூ.25 வரை வரை விற்பனையாகிறது. ஒரு துண்டு தர்பூசணி ரூ.10-க்கும் விற்பனையானது.