அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்: சென்னை மக்கள் வெளியே வரவேண்டாம் - மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
|சென்னை மக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை வெளியே வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் கோடை காலம் ஆரம்பித்து வெயில் சுட்டெரித்து வருகிறது. ஈரோட்டில் அதிகபட்சமாக இதுவரை 109 டிகிரி வரை பதிவாகியுள்ளது. இதேபோல், சேலம், கரூர், தர்மபுரி, திருத்தணி, திருப்பத்தூர், மதுரை, திருச்சி, வேலூர் போன்ற இடங்களிலும் 100 டிகிரியை தாண்டி வெப்பம் கொளுத்துகிறது. இதில் சென்னையில் மீனம்பாக்கத்தில் அவ்வப்போது 100 டிகிரியை வெயில் தாண்டுகிறது. நுங்கம்பாக்கத்தில் 100 டிகிரியையொட்டி வெப்பம் பதிவாகுவதை பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் சென்னையில் இதுவரை அதிக வெப்பம் பதிவாகவில்லை என்றாலும், வெப்பத்துடன் கூடிய உஷ்ணம் இருந்து வருகிறது. கடலோரப் பகுதிகளில் காற்றில் ஈரப்பதம் 50 முதல் 80 சதவீதம் வரை இருந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் வெப்பநிலை, காற்றில் ஈரப்பதம் ஆகியவற்றால் அசவுகரியமான நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களின் விவரம் வருமாறு:-
வெளியில் வரவேண்டாம்
* வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை மக்கள் வெளியில் வரவேண்டாம்.
* இந்த நேரங்களில் வெளிச் செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும்.
* அடிக்கடி தண்ணீர் குடிக்கும் வழக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.
* மதுபான வகைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
* எளிதில் செரிமானமாகக் கூடிய உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது. பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டால் உடலுக்கு நன்மை பயக்கும்.