செங்கல்பட்டு
மாமல்லபுரத்தில் பிரான்ஸ் நாட்டு பயணிகள் வருகை அதிகரிப்பு
|மாமல்லபுரத்தில் பிரான்ஸ் நாட்டு பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் அங்குள்ள புராதன சின்னங்களை ரசித்து பார்த்தனர்.
கொரோனா கட்டுப்பாடுகள்
பிரான்ஸ் நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்பட்டன. அதனால் அந்நாட்டு சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் தங்கள் குழந்தைகளுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். விசா வழங்குவதற்கு கடுமையான நடைமுறைகள் அங்கு பின்பற்றப்பட்டன.
அப்படி கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுதல், தனிமைபடுத்துதல் உள்ளிட்ட விதிகள் பின்பற்றப்பட்டன. இந்த நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டு பயணிகள்
விமானத்தில் வெளிநாட்டு சுற்றுலா செல்பவர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை முறைகள் அனைத்தும் நீக்கப்பட்டன. பிரான்ஸ் நாட்டில் தற்போது பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து விடுமுறை தின பொழுதை கழிக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்திற்கு பிரான்ஸ் நாட்டு பயணிகள் வரத்து தொடங்கி உள்ளது. மாமல்லபுரம் வருகை தரும் பிரான்ஸ் நாட்டினர் இங்குள்ள மீனவர் பகுதி கடற்கரை குடில்கள், விடுதிகள் மற்றும் ஒத்தவாடை தெருவில் அறைகள் எடுத்து தங்கி உள்ளனர்.
குறிப்பாக பிரான்ஸ் நாட்டினர் அங்குள்ள ஒத்தவாடை தெரு, கடற்கரை கோவில் தெருவில் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க செல்லும்போது சாலையில் பாசிமணிகள் விற்று கொண்டிருந்தவர்களிடம் பாசிமணிகள் வாங்கி மகிழ்ந்தனர். மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்துள்ளதால் அங்குள்ள கடற்கரை கோவில் ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்கள் முன்பு பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகள் குழு, குழுவாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்ததை காண முடிந்தது.
பிரான்ஸ் நாட்டு பயணிகளுக்கு சுற்றுலா வழிகாட்டிகள் மாமல்லபுரம் சிற்பங்கள் பற்றி பிரெஞ்சு மொழியில் விளக்கி கூறினர்.