திருச்சி
திருச்சி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
|திருச்சி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. எனவே முககவசம் அணிவதுடன் தண்ணீரை காய்ச்சி பருக வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகளவில் குவிந்து வருகிறார்கள். குறிப்பாக குழந்தைகள் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, திருச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் புறநோயாளிகளில் 25 சதவீதம் பேர் காய்ச்சலுக்காக வருகிறார்கள். இதில் இன்புளூயன்சா காய்ச்சல் வந்த 3 நாட்களுக்குள் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்கு வந்து விடுகிறது. ஆனால் டெங்குகாய்ச்சல் தற்போது அதிகமாக வருகிறது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
முககவசம்
கொரோனா தீவிரமாக இருந்த காலக்கட்டத்தில் முககவசம் அணிதல், சமூகஇடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை பொதுமக்கள் தீவிரமாக கடைபிடித்தனர். ஆனால் தற்போது முககவசம் அணியாமல் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கும், விழாக்களுக்கும் சர்வசாதாரணமாக கூட்டம், கூட்டமாக சென்று வருவதால் காய்ச்சல் வேகமாக பரவக்கூடும். எனவே பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும்.
இருமும்போதும், தும்மும்போதும் கைக்குட்டையை வைத்து கொள்ள வேண்டும். தண்ணீரை காய்ச்சி பருக வேண்டும். வீட்டின் முன்பு தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும் என்று கூறினர்.