திண்டுக்கல்
பழனி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
|நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் பழனி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு ஏற்பட்டது.
பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு குடிநீர், பாசன ஆதாரமாக பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி ஆகிய அணைகள் உள்ளன. கொடைக்கானல், சவரிக்காடு மலைப்பகுதிகளில் மழை பெய்யும்போது மேற்கண்ட அணைகளுக்கு நீர்வரத்து ஏற்படும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் பழனி அணைகளுக்கு நீர்வரத்து இன்றி காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொடைக்கானல் பகுதியில் பரவலான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பழனியில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதன்படி 66.47 அடி உயரம் கொண்ட வரதமாநதி அணை முழு கொள்ளளவை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 16 கனஅடி நீர் வரத்து உள்ளது. வரத்தாகும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
65 அடி உயரம் கொண்ட பாலாறு-பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் 37.8 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 92 கனஅடி நீர்வரத்து உள்ளது. குடிநீருக்காக அணையில் இருந்து 9 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதேபோல் 13.7 அடி உயரம் கொண்ட கோடைகால நீர்தேக்கமும் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.