< Back
மாநில செய்திகள்
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,000 கனஅடியாக அதிகரிப்பு
மாநில செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,000 கனஅடியாக அதிகரிப்பு

தினத்தந்தி
|
17 Aug 2023 2:00 AM GMT

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தர்மபுரி,

கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து உள்ளது. இதன் காரணமாகவும் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இந்த நிலையில் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் மொத்தம் வினாடிக்கு 14 ஆயிரத்து 136 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று மதியம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. அதன்படி மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது.

இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது 13,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

மேலும் செய்திகள்