அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு - கல்வித்துறை தகவல்
|அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2 வருடமாக மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
சென்னை,
கொரோனா தொற்று பாதிப்பால் பொது முடக்கம் ஏற்பட்டு ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டன.
வேலையில்லாமல் வருவாய் இழப்பு ஏற்பட்டன. வேலையின்றி வீடுகளில் முடங்கிய கூலி தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் தங்களின் குழந்தைகளை தொடர்ந்து தனியார் பள்ளியில் படிக்க வைக்க முடியாமல் மாற்று சான்றிதழை பெற்று அரசு, மாநகராட்சி பள்ளிகளில் சேர்த்தனர்.
இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2 வருடமாக மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதன்படி, 72 லட்சம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
மழலையர் பள்ளி, துவக்கப் பள்ளிகளில் இந்த ஆண்டும் அதிகளவு மாணவர்கள் சேர்ந்தனர். அரசு பள்ளிகளில் உயர்ந்த மாணவர் சேர்க்கையை தக்க வைத்துக்கொள்ள தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள், ஸ்மார்ட் வகுப்பறை, தரமான கற்றல் பணி ஆகியவற்றை மேம்படுத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு அடிப்படையான வசதிகள் அளிக்கப்படுகின்றன.
ஆசிரியர் பற்றாக்குறையை போக்க தற்காலிக ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் பெற்றோர்களிடம் ஆலோசனை பெற்று பள்ளிகளுக்கு தேவையான அடிப்படையான வசதிகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.