சென்னை
சென்னை விமான நிலையத்தில் விமான டிக்கெட்டுடன் வசூலிக்கும் மேம்பாட்டு கட்டணம் அதிகரிப்பு
|சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடம் விமான டிக்கெட்டுடன் வசூலிக்கும் மேம்பாட்டு கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி உள்நாட்டு பயணிக்கு ரூ.90-ம், பன்னாட்டு பயணிக்கு ரூ.150-ம் உயர்த்தப்படுகிறது.
இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு, அந்தந்த விமான நிலைய அடிப்படை வசதிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு பன்னாட்டு விமான பயணிக்கும், உள்நாட்டு பயணிக்கும் விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு விமான நிலையங்களுக்கும் மாறுபட்ட கட்டணமாக இருக்கும். இந்தியாவில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் இந்த கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே உள்நாட்டு விமான பயணிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.205-ம், பன்னாட்டு விமான பயணிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.300-ம் விமான நிலைய மேம்பாட்டு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த கட்டணத்தை மத்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்கு முறை ஆணையம் மாற்றி அமைத்துள்ளது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் பயணிக்கும் உள்நாட்டு விமான பயணிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.295-ம், பன்னாட்டு விமானத்தில் பயணிக்கும் ஒவ்வொரு பயணிகளுக்கும் ரூ.450-ம் என விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி உள்நாட்டு விமான பயணிக்கு ரூ.90-ம், பன்னாட்டு விமான பயணிக்கு ரூ.150-ம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் பயணிகளிடம் தனியாக வசூலிக்கப்பட மாட்டாது. அவர்கள் பயணிக்கும் விமான டிக்கெட் கட்டணத்துடன் இணைத்து ஒன்றாக வசூலிக்கப்படும். அதன்பின்னர் அந்தந்த விமான நிறுவனங்கள், பயணிகளிடம் வசூலித்த விமான நிலைய மேம்பாட்டு கட்டணத்தை இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கும்.
மேலும் இந்த கட்டணம் பயணிகள் புறப்படும் விமான நிலையத்தில் மட்டும் வசூலிக்கப்படும். அந்த பயணிகள் சென்று இறங்கும் விமான நிலையத்தில் மேம்பாட்டு கட்டணம் தனியாக வசூலிக்கப்பட மாட்டாது.
இந்த கட்டண உயர்வு சென்னை விமான நிலையத்தில் மட்டும் இன்றி நாடு முழுவதும் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் அமல்படுத்தப்படுகிறது. ஆனால் அந்தந்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு தகுந்தார்போல் விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் மாறுபட்டு இருக்கும்.
இந்த கட்டணம் விமான டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கப்படுவதால் பயணிகள் பலருக்கு இந்த கட்டண உயர்வு பற்றி தெரியாது. இது மறைமுக கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
விமான பயணிகளிடம் விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படும் சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என இந்திய விமான நிலைய ஆணைய விதிமுறைகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.