தமிழ்நாட்டில் அறுவை சிகிச்சை பிரசவம் அதிகரிப்பு - 6 ஆண்டுகளில் 45 சதவீதமாக உயர்வு..!
|தமிழ்நாட்டில் அறுவை சிகிச்சை பிரசவம் அதிகரித்துள்ளதாக தேசிய குடும்ப நல சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மாறி வரும் உணவு முறைகள், குறைந்து போன உடற்பயிற்சி போன்றவற்றால் மகப்பேறு ஆனது கனிசமான நபர்களுக்கு கனவாகவும், சவாலாகவும் ஆகிவிட்டது. சுகப்பிரசவம் என்பதே கேள்விக்குறியாக மாறிவிட்டது.
மத்திய சுகாதாரம் குடும்ப நல அமைச்சகத்தின ஐந்தாவது தேசிய குடும்ப நல சர்வேயின் படி 'சி' பிரிவு என்கிற (சிசேரியன்) அறுவை சிகிச்சை பிரசவம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து உள்ளது. தமிழ்நாட்டில் இரண்டில் ஒரு பிரசவம் அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015, 2016 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நான்காவது குடும்ப நல சர்வேயில் தமிழ்நாட்டில் 34.1 சதவீதமாக இருந்தது. சமீபத்தில் வெளியான ஐந்தாவது குடும்ப நல சர்வேயில் 44.9 சதவீத பிரசவங்கள் (சிசேரியன்) அறுவை சிகிச்சை முறையில் நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளடைவில் அதிகபட்சமாக தெலுங்கான மாநிலத்தில் 60.7 சதவீதம் (சிசேரியன்) அறுவை சிகிச்சை பிரசவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் தான் அதிக அளவிலான (சிசேரியன்) அறுவை சிகிச்சை பிரசவங்கள் பதிவாகியுள்ளன.
இங்கு அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளில் தான் அறுவை சிகிச்சை பிரசவம் அதிகம் செய்யப்படுகிறது. இதிலும் கிராமப்புற தனியார் மருத்துவமனைகளில் 65.7 சதவீத அளவுக்கு அறுவை சிகிச்சை பிரசவங்கள் நடக்கின்றன. நகர்புறத்தில் 61.5 சதவீதமாக பதிவாகியுள்ளது.
அரசு மருத்துவமனைகளில், நகர்புறங்களில் 37.5 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 35.1 சதவீதம் அறுவை சிகிச்சை பிரசவங்கள் நடந்துள்ளதாக ஐந்தாவது குடும்ப நல சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைகாலமாக கர்ப்ப கால சர்க்கரை நோய் பெருகிறது. கர்ப்ப கால மன அழுத்தம் போன்றவற்றால் (சிசேரியன்) அறுவை சிகிச்சை பிரசவம் பெருகியதற்கு காரணங்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரிய குழந்தை பிறப்பதில் சிக்கல், தலை மாறுவது ஆகியவையும் அறுவை சிகிச்சை பிரசவத்திற்கு முக்கிய காரணங்கள் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம் தனியார் மருத்துவமனைகளில் பெரும்பாலானவர்களுக்கு (சிசேரியன்) அறுவை சிகிச்சை பிரசவத்திற்கு அறிவுறுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.